திருவாரூர் மாவட்டத்தில் மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் பரவல் அதிகரிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் பரவல் அதிகரிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுத்திட தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரிய அம்மை நோய் பரவல்
திருவாரூர் மாவட்ட பிரதான தொழில் விவசாயமாகும். இதனால் விவசாயம் பொதுமக்களின் முக்கியமான வாழ்வாதாரமாக இருந்த போதும், அதற்கு அடுத்த இடத்தில் கால்நடைகள் வளர்ப்பு என்பது இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் கிராம பகுதிகளில் அதிகமாக ஆடு, கோழி மற்றும் மாடுகள் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் என்பது 60 சதவீதம் வரை பரவியது. இதனால் மாடுகள் உயிரிழப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மாடுகளுக்கு இந்த பெரிய அம்மை நோய் தாக்குதல் என்பது தற்போது பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாட்டின் உடம்பு முழுவதும் கட்டியாக வந்து அது பின்பு புண்ணாக மாறி மாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கால்பகுதியில் முதலில் வீக்கம் ஏற்பட்டு, பின்பு மாட்டிற்கு பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படுவதே இந்த நோயின் அறிகுறியாகும்.
பெரிய அம்மை தடு்ப்பூசி
தமிழகத்தில் இதுவரை பெரிய அம்மை நோயால் எந்த மாடும் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மாடுகளுக்கு இந்த அறிகுறி காணப்படுகிறது. இந்த நோயை முன்னே தடுக்கும் வகையில் மாடுகளுக்கு பெரிய அம்மை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி 4 மாதத்திற்கு மேல் உள்ள கன்று குட்டியில் இருந்து அனைத்து மாடுகளுக்கும் போடப்படுகிறது. மேலும் 7 மாதம் வரை கர்ப்பமாக உள்ள மாடுகளுக்கும் தடுப்பூசி போடலாம் என்று கூறப்படுகிறது. 7 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் மாடுகளுக்கு இந்த தடுப்பூசியை டாக்டர்கள் போடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரப்படுத்த வேண்டும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
திருவாரூர் மாவட்டத்தில் பெரிய அம்மை பாதிப்பு என்பது மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாடுகள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வடமாநிலத்திலிருந்து இது பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளுக்கும் மாடுகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும். இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை கால்நடைத்துறை விளக்க வேண்டும் என்றனர்.
--