துப்பு துலங்காத வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நகை திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நகை திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கொள்ளை சம்பவம் அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாகவே ஆளில்லாத வீடுகளை குறிவைத்து பொருட்களையும், நகைகளையும், கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல சமீப நாட்களாக வீடு புகுந்து பெண்களிடம் நகைகளை பறித்து செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ஓடும் பஸ்களில் நகை திருட்டு அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் அருகில் 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் நகை பறித்து சென்ற சம்பவங்களில் இன்னும் துப்பு துலக்காத நிலை நீடிக்கிறது. கடந்த ஜூலை மாதம் ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற 2 ஆதாய இரட்டை கொலை சம்பவங்களிலும் இன்னும் குற்றவாளிகள் பிடிபடாத நிலை நீடிக்கிறது.
குற்றப்பிரிவு போலீசார்
கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தால் உடனடியாக சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளை பிடித்து நகைகளை மீட்பது என்பது தொடர் நடவடிக்கையாக இருந்து வந்தது. இதற்கு குற்றப்பிரிவு போலீசார் தனியாக செயல்பட்டு வந்ததோடு குற்றப்பிரிவில் அனுபவ மிக்க போலீசார் இடம் பெற்றிருந்ததும் ஒரு காரணமாகும்.
ஆனால் தற்போதைய நிலையில் போலீஸ் நிலையங்களில் குற்ற பிரிவு முறையாக செயல்படாத நிலையில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் துப்பு துலக்கப்படாத நிலையில் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பறிபோன பொருட்கள்
போலீசாரின் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டால் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் வாய்ப்பு கிடைக்கும் இடம் மற்றும் நேரங்களில் எல்லாம் திட்டமிட்டு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் நடந்த சம்பவங்களில் துப்புதுலக்கி பறிபோன பொருட்களை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பஸ் நிலையங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு இரவு நேர ரோந்து பணியையும் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.