ஈரோடு பஸ் நிலையத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவம்: ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த பயணிகள் வேண்டுகோள்


ஈரோடு பஸ் நிலையத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவம்: ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த பயணிகள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 July 2023 2:33 AM IST (Updated: 3 July 2023 12:22 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவம் அதிகரிப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு பஸ் நிலையத்தில் திருட்டு சம்பவம் அதிகரிப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கல்லூரி மாணவி

ஈரோடு பஸ் நிலையத்துக்கு நேற்று மாலை கல்லூரி மாணவி ஒருவர் வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். இந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் நிலையத்தை விட்டு வெளியே பஸ் மெதுவாக சென்று கொண்டு இருந்தது.

அப்போது மாணவியின் அருகில் நின்று கொண்டு இருந்த மர்ம நபர் ஒருவர், அவரது பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி, தான் கல்லூரியில் செலுத்துவதற்காக வைத்திருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனரே என்று கூறி கதறி அழுதார். இதை பார்த்து பரிதாபப்பட்ட சக பயணிகளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

திருட்டு சம்பவம்

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் தொடர்ந்து அரங்கேறுவதாக குற்றம்சாட்டிய பயணிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும் இங்கு தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும், ஊரில் இருந்து ஈரோட்டுக்கு வரவேண்டும் என்றாலும் ஈரோடு பஸ் நிலையம் வரவேண்டியது அவசியம் ஆகும்.

அப்படி வரும்போது இவர்களை குறி வைத்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பஸ் நிலையத்தை சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருவதுதான். இங்கு மதுகுடிப்பவர்கள் ஈரோடு பஸ் நிலையத்துக்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.

தீவிர நடவடிக்கை

ஈரோடு பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் மதுபிரியர்கள் சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக மினி பஸ் நிலையத்தில் எந்தநேரம் பார்த்தாலும் மதுபிரியர்கள் படுத்து கிடப்பதை பார்க்கலாம். இவர்கள் மது குடிக்க பணம் இல்லையென்றால் இங்கு வரும் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். ஒரு சில மர்மநபர்கள் பஸ்சில் ஏறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் பணம் மற்றும் செல்போனை திருடுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே ஈரோடு பஸ் நிலையத்தில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரியும் மர்ம நபர்களை பிடித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story