பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகரிப்பு
கூடலூரில் திருமண நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
கூடலூர்,
கூடலூரில் திருமண நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
குடிநீர் பாட்டில்கள்
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதி மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக திகழ்கிறது. சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்தி விட்டு வனப்பகுதி மற்றும் பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.
இதனால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் ½, ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஏற்கனவே பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளின் போது தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவது அதிகரித்தது.
பயன்பாடு அதிகரிப்பு
இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடந்த காலங்களில் அதிகாரிகள் அபராதம் விதித்து வந்தனர். இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அடியோடு குறைந்தது.
இந்தநிலையில் கூடலூர் பகுதியில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளின் போது தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மேலும் சில திருமண மண்டபங்களில் தடை உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து திருமண நிகழ்ச்சியில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இதனால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபராதம் விதிக்கவும் ஆலோசித்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.