காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்
லாரி உரிமையாளர்களின் 11 அம்ச கோரிக்கைகளை இன்னும் 30 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சம்மேளன தலைவர் தனராஜ் கூறினார்.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளன தலைவர் தனராஜ் தலைமை தாங்கினார். இதில் வாகனங்களுக்கு இதுவரை ஆன்லைனில் விதிக்கப்பட்ட அபராதங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாகவும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
புதிய செயலி
பின்னர் சம்மேளன தலைவர் தனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாங்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் 6-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். எங்களது கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலனை செய்யவும், பேச்சுவார்த்தைக்கு அழைக்கவும் 30-ந் தேதி வரை காலஅவகாசம் கொடுத்து இருந்தோம்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தோம். அப்போது ஆன்லைன் அபராதங்கள் தவறாக விதிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் வினித்தேவ் வான்கடேவிடம் கொடுத்தோம். அப்போது அவர் காவல்துறை சார்பில் ஒரு புதிய செயலியை ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளோம். அப்போது இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.
வேலைநிறுத்த போராட்டம்
இதேபோல் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் 11 அம்ச கோரிக்கைகளை ஓரிரு மாதங்களில் பரிசீலனை செய்வதாக தெரிவித்து உள்ளனர். அதில் ஓரிரு கோரிக்கைகளுக்கு நல்ல முடிவு கிடைத்து உள்ளது. இன்னும் 30 நாட்களுக்குள் 11 அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவார்கள் என நம்புகிறோம்.
அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்களது சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். உத்தரபிரதேச அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஆன்லைனில் விதிக்கப்பட்ட அபராதங்களை தள்ளுபடி செய்து உள்ளது. அதேபோல் தமிழக அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
சுங்க கட்டணம்
மத்திய அரசு ஜி.பி.எஸ். முறையில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்து உள்ளது. அவ்வாறு வசூல் செய்தால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே ஜி.பி.எஸ். முறையில் சுங்ககட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். காலாவதி யான சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
லாரி உரிமையாளர்களின் வாழ்வாதார பிரச்சினை அதிகம் உள்ளது. அதை எல்லாம் நிறைவேற்றி விட்டு, லாரி கேபினில் குளிர்சாதன வசதி செய்யும் முடிவுக்கு மத்திய மந்திரி நிதின்கட்காரி வரவேண்டும். அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று. அதனால் லாரி உரிமையாளர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்து, வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து, குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கும் பட்சத்தில் டிரைவரின் கையொப்பத்துடன் என்ன குற்றம், டிரைவர் பெயர் உள்ளிட்டவற்றை ரசீதில் குறிப்பிட வேண்டும். லாரி தொழிலுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் அதிகபட்ச தண்டனை விதித்து சம்பந்தப்பட்ட வாகனத்தை அபராதம் இன்றி விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அரசுக்கு வலியுறுத்தப்பட்டன.
இந்த கூட்டத்தில் சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளாளர் தாமோதரன், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.