சுதந்திர தின விழாவையொட்டி: தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸ் உஷார்


சுதந்திர தின விழாவையொட்டி: தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸ் உஷார்
x

சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை,

நாட்டின் சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கு இடமானவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடலோர பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, மீனவ கிராமங்களையொட்டி உள்ள பகுதிகளில் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்களுக்கு கடல் மார்க்கத்தில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் படகு, கப்பல்களில் வந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, மாநிலம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

ரெயில் நிலையங்கள்

குறிப்பாக கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளும், அவர்களின் உடைமைகளும் சோதனை செய்யப்படுகின்றது. இதேபோல, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து ரெயில்நிலைய வளாகங்களை சுற்றி வந்து கண்காணிக்கிறார்கள்.

குறிப்பாக, சென்னை கோட்டத்தில் 3 டி.எஸ்.பி.க்கள், 13 இன்ஸ்பெக்டர்கள், 76 சப்-இன்ஸ்பெக்டர்கள், 814 போலீசார் மற்றும் 3-வது, 5-வது பட்டாலியன் கம்பெனியை சேர்ந்த 140 போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும், முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் கொண்டு சீரான இடைவெளியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல, சாதாரண உடையிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேகத்துக்கு இடமானவர்களை கண்காணிக்கின்றனர்.

1.20 லட்சம் போலீஸ்

இதேபோல, சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள், மார்க்கெட்டு பகுதிகள், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரித்து, முகவரியையும் பெற்ற பின்னரே அவர்களை போலீசார் விடுவிக்கின்றனர். இதுதவிர தனியார் தங்கும் விடுதிகளிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விடுதிகளில் தங்குவோர் குறித்த முழு விவரங்களை விடுதி உரிமையாளர்கள் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு மட்டும் 9 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து தீவிர வாகனச் சோதனையும் செய்து வருகின்றனர்.

5 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் தமிழக அரசின் சார்பில் சுதந்திரதின விழா நடைபெறும் ராஜாஜி சாலை முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. விழா முடியும் வரையிலும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்களை மாற்று வழியில் இயக்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ராஜாஜி சாலையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இதை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கோட்டை முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மோப்பநாய் உதவியுடன் மர்ம பொருட்கள் பற்றிய சோதனையும், வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது. கோட்டையை சுற்றிலும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி சுதந்திர தினத்தை நடத்திமுடிப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story