குடிநீர் வழங்காததை கண்டித்து சுதந்திர தினம் புறக்கணிப்பு
குடிநீர் வழங்காததை கண்டித்து சுதந்திர தினம் புறக்கணிப்பு
தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் மணக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் லலிதா கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அணைக்கரை கூட்டு குடிநீர் மற்றும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தலைஞாயிறு ஒன்றியத்துக்கு கடந்த ஓராண்டாக குடிநீர் சரிவர வழங்காத குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தை ஊராட்சி மன்ற தலைவரின் கூட்டமைப்பு சார்பாக புறக்கணிப்பது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் குழாய் பதிக்கும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். கலைஞர் வீடுகட்டும் திட்டத்தை உடனடியாக அறிவித்து தகுதி உடைய ஊராட்சிகளுக்கு கூடுதல் வீடுகள் ஒதுக்க வேண்டும். ஊராட்சியில் வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஆடு, மாடு மற்றும் கால்நடை வளர்ப்பு கொட்டகையை ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.