அண்ணா விளையாட்டு மைதானத்தில்சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள்கலெக்டர் ஆய்வு
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி விளையாட்டு மைதானம் முழுவதும் வர்ணம் பூசும் பணியும், சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று காலை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், தேசிய கொடி ஏற்றும் கம்பத்தை சுற்றிலும் மேடை அமைக்க ஏற்பாடு செய்யும்படியும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கும், விழாவை காண வரும் பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தாசில்தார் விஜய் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.