தூத்துக்குடியில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்:கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியேற்றினார்
தூத்துக்குடியில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியேற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
சுதந்திரதின விழா
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விளையாட்டு அரங்கத்துக்கு காலை 9.05 மணிக்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து புறாக்கள், வண்ண பலூன்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 78 ஆயிரத்து 334 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பாராட்டு
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 363 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் தேசபக்தியை பறைசாற்றும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) பிரபு, மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபுத்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வேளாண்மை இணை இயக்குனர் பழனிவேலாயுதம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், தாசில்தார் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.