சுதந்திர தினம்: மத்திய- மாநில அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
சுதந்திர தினத்தையொட்டி மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.
சென்னை,
சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.
அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தார். அவருடன் கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் உடன் இருந்தார்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு கதர் ஆடையையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.
எல்.ஐ.சி., வருமானவரித்துறை
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில், தென் மண்டலத்தின் மண்டல மேலாளர் ஜி.வெங்கடரமணன் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தார். சென்னை வருமான வரித்துறை வளாகத்தில் வருமானவரி முதன்மை தலைமை ஆணையரும், தலைமை இயக்குனருமான சுனில் மாத்தூர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது இணை மேலாண்மை இயக்குனர் விஷூ மஹாஜன் உடன் இருந்தார்.
தேசியக்கொடி ஏற்றி மரியாதை
இதேபோல், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் தேசியக்கொடியை ஏற்றினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை இயக்குனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சு.வினீத் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை இந்தியன் ஆயில் பவனில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனரும், மாநில தலைவருமான வி.சி.அசோகன் தேசியக்கொடியை ஏற்றினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பொ.சங்கர், சென்னை எழிலகத்தில் கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான எஸ்.கே.பிரபாகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
போக்குவரத்து கழகம்
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகமான பல்லவன் இல்லத்தில், மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் க.குணசேகரன், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாளருமான மு.அ.சித்திக் தேசியக்கொடியை ஏற்றினார்கள்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் பதிவாளர் டாக்டர் ம.பா. அஸ்வத் நாராயணன் உள்பட துறைத் தலைவர்கள், அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
தெற்கு ரெயில்வேயில்...
தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மைதானத்தில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுஷல் கிஷோர், சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா, தெற்கு ரெயில்வே மகளிர் தலைமையக அமைப்பின் தலைவர் சோனியா சிங், அதிகாரிகள், ஊழியர்கள், தெற்கு ரெயில்வேயின் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
விமான நிலையம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய இயக்குனர் தீபக் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மத்திய தொழிற்படையினர் அணிவகுப்பை ஏற்றார். விமான நிலையத்தில் தீவிரவாதிகள் புகுந்ததால் அவற்றை முறியடிப்பது குறித்து ஒத்திகை நடந்தது.
விழாவில் விமான நிலைய இயக்குனர் தீபக் பேசுகையில், மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயணிகள் வசதிக்காக நவீன வசதியுடன் கூடிய முனையம் திறக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களில் பயணிகள் எந்த வித சிரமமின்றி பயணம் செய்கின்றனர் என கூறினார்.