சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்-அமைச்சர் பங்கேற்பு
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடப்பது வழக்கம். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று தேநீர் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
சென்னை,
விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் வரவேற்றார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, மேயர் பிரியா மற்றும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் ரசித்து பார்த்தனர். 75-வது சுதந்திர தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கலைக்குழுவினருக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து சிறிய அளவிலான காந்தி உருவச்சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார்.
தேநீர் விருந்து நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து கொண்ட நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.