உலக நாடுகள் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் 'சூப்பர் பவர்' நாடாக பார்க்கின்றன கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
உலக நாடுகள் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் பவர் நாடாக பார்க்கின்றன என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
இன்றைய சூழலில் உலக நாடுகள் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் பவர் நாடாக பார்க்கின்றன என்று வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சிப்பாய் புரட்சி நினைவு தினம்
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு 216-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பூமி புனிதமானது
அதைத்தொடர்ந்து வேலூர் கோட்டை மைதானத்தில் முன்னாள் ராணுவவீரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் கவர்னர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பேசியதாவது:-
இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆயிரக்கணக்கானோர் ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி செய்து இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். இந்த மண், இந்த பூமி புனிதமானது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் அனைவருக்கும் இந்தியநாடு முழுவதும் நன்றி செலுத்துவோம். சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ் மிகவும் பழமையான மொழி, சக்தி வாய்ந்த மொழி, தமிழ் மக்களை போன்று தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும். நிச்சயம் ஒருநாள் தமிழில் பேசுவேன்.
தேசம் தழுவிய போராட்டம்
வேலூரில் நடந்த புரட்சியை ஆங்கிலேயர்கள் கலகம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் நான் இதை ஆங்கிலேயர்களை விரட்ட ஏற்பட்ட புரட்சியாக கருதுகிறேன். சிப்பாய் புரட்சியில் இந்திய வீரர்கள் சாதி, மதத்தை கடந்து போராடியுள்ளனர். இந்த மண்ணில் தான் நாட்டுக்காக போராடிய வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியன், தீரன் சின்னமலை போன்றவர்கள் சிறந்த போராட்ட வீரர்களாக இருந்துள்ளனர். அவர்கள் போராடவில்லை எனில் நாம் இப்போது இருப்பது போல சுதந்திரமாக இருக்க முடியாது.
வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு தேசம் தழுவிய போராட்டம். புரட்சி தொடங்கிய அன்றே சுதந்திர போராட்டம் தொடங்கியது. 1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது படைக்கு சிப்பாய் வேண்டிய போது முதலில் ஆட்களை அனுப்பியது வேலூர். 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வேளையில் அனைத்து சுதந்திர போராட்டக்காரர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரை மட்டுமே நினைத்து பார்க்கிறோம்.
திராவிடம் இடம் சார்ந்தது...
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம். இந்தியாவை பல ராஜாக்கள் ஆண்டபோதும் ஒரே குடும்பமாக இருந்தோம். ஆங்கிலேயர்கள் தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். விந்தியமலையை அடிப்படையாக வைத்து வடக்கில் உள்ளவர்களை ஆரியர்கள் என்றும், தெற்கில் உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் கூறினர். ஒருங்கிணைந்த மராட்டியம், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளும் திராவிடமாக இருந்தது. திராவிடம் என்பது இடம் சார்ந்தது மட்டுமே.
1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை மட்டும் பிரிக்கவில்லை. அதே சமயத்தில் சுமார் 600 நாடுகளும் இந்தியாவில் இருந்து பிரியும் நிலை காணப்பட்டது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய்படேல் தான் இந்தியாவை ஒன்றுகூட்டினார். தற்போது நாடு முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியா சமமாக வளராமல் ஏற்றத்தாழ்வுடன் வளர்ந்துள்ளது. தமிழகம் மற்ற விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கூட கல்வி சேர்க்கை விகிதத்தில் முன்னோடி மாநிலமாக உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பின் தங்கியும், ஒரு சில மாவட்டங்கள் மேலோங்கியும் உள்ளது அதனை சமம் செய்ய வேண்டும்.
சூப்பர் பவர் நாடு
இன்றைய சூழலில் உலகநாடுகள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் பவர் நாடாக இந்தியாவை பார்க்கின்றன. இதற்கு உதாரணம் கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கினோம். தற்போது இந்தியாவின் மீதான உலகின் பார்வை முற்றிலும் மாறி உள்ளது. வெளிநாடுகளில் நாம் இந்தியர் என்ற பெருமையோடு நடக்கலாம். இந்திய பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் மீதான பார்வையிலேயே தெரியும்.
நமது நாடு 100-வது சுதந்திர தினத்தில் உலகை ஆளும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்தியாவின் ராணுவத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களை அர்ப்பணித்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வானமே எல்லை என்ற நிலை உள்ளது. எனவே இளைஞர்கள் நாட்டிற்காக பாடுபட வேண்டும்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.
இதில் அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் கோட்டை மதில் சுவரின் நடைபாதையின் மீது நடந்து சென்று அகழி மற்றும் கோட்டையின் வெளிப்புற மற்றும் உட்புற பகுதியை பார்வையிட்டார்.