நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் பழங்குடியின மக்கள்


நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் பழங்குடியின மக்கள்
x

கோத்தகிரி அருகே சாலை வசதி இல்லாததால் பழங்குடியின மக்கள் நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் பரிதாப நிலை காணப்படுகிறது. சாலை வசதி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே சாலை வசதி இல்லாததால் பழங்குடியின மக்கள் நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் பரிதாப நிலை காணப்படுகிறது. சாலை வசதி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டம்

கோத்தகிரி அருகே கெங்கரை ஊராட்சிக்கு உட்பட்டது குடகூர் கிராமம். இங்கு இருளர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடகூருக்கு சாலை வசதி இல்லாததால், கிராமத்தில் இருந்து கெங்கரைக்கு செல்ல 3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் உள்ள ஒற்றையடி பாதையில் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவரை மீட்டு, வனப்பகுதி வழியாக தொட்டில் கட்டி கெங்கரைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாலை வசதி

மேலும் கரடு, முரடான பாதையில் கிராம மக்கள் தொட்டிலில் தூக்கி செல்வதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இதேபோல் கர்ப்பிணிகள், நோயாளிகள் அவசர நேரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. சாலை வசதி இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள குடகூர் கிராமத்தில் சாலை வசதி இல்லை.

இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் தினமும் 3 கி.மீ. வனப்பகுதி வழியாக நடந்து சென்று வருகின்றனர். அப்போது வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் மனித-வனவிலங்கு மோதல் அதிகரித்து உள்ளது. நோயாளிகள் மற்றும் வனவிலங்கு தாக்கியவர்களை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது சிலர் உயிரிழந்தும் உள்ளனர். எனவே, சாலை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story