பள்ளி மாணவர்களுக்கும் புத்தொழில் பயிற்சி வழங்கப்படும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பள்ளி மாணவர்களுக்கும் புத்தொழில் பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை நங்கநல்லூரில் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- ஸ்ரீ வாரி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல் கலை கைவினை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:-
பிரின்ஸ் பள்ளி மிகவும் கட்டுப்பாடுடன், கண்டிப்புடன் நடைபெறும் பள்ளியாகும். இங்கு படித்த ஏராளமான மாணவர்கள் பல்வேறு உயர் பதவியில் உள்ளனர்.
மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் போன்ற பாடத் திட்டத்திற்கு தகுந்தார்போல் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது போல், பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தொழில் பயிற்சி வழங்க இருக்கிறோம். அரசு இதற்கான திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.