விருதுநகரை தொழில்மயமாக்கும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராத நிலை


விருதுநகரை தொழில்மயமாக்கும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராத நிலை
x

கடந்த 14 ஆண்டுகளாக விருதுநகரை தொழில்மயமாக்கும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராத நிலை உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

கடந்த 14 ஆண்டுகளாக விருதுநகரை தொழில்மயமாக்கும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராத நிலை உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மண்டலம்

கடந்த 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது விருதுநகர்-சாத்தூர் இடையே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலமும் கண்டறியப்பட்டது. பிரபல தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்த நிலையில் திடீரென திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில் முதலீட்டு மையம் தொடங்க மத்திய அரசு தயாரான நிலையில் மாநில அரசின் ஒப்புதல் கிடைக்காததால் திட்டமும் கைகூடவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருதுநகர்-சாத்தூர் இடையே 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில்பூங்கா தொடங்கப்படும் என அறிவித்தார். இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 2 ஆயிரம் ஏக்கர்நிலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நிலத்தின் விலை அதிகம் உள்ளதால் திட்டத்திற்கான பரப்பு ஆயிரத்து 500 ஏக்கராக குறைக்கப்பட்டது.

பா.ஜ.க. வலியுறுத்தல்

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனியார் பங்களிப்புடன் தொழில்பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு புதிய தொழில் கொள்கையை அறிவித்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்தாண்டு தொழில்மானிய கோரிக்கையின்போது விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். பட்டம்புதூர் அருகே ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய அரசு விருதுநகர்-சாத்தூர் இடையே ஜவுளிபூங்கா அமைக்க ரூ.2 ஆயிரத்து 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், திட்டத்தினை தொடங்க தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பா.ஜ.க.வினர் வலியுறுத்தும்நிலை தொடர்கிறது.

ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக விருதுநகரை தொழில்மயமாக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் திட்டங்கள் தொடங்கப்படாத நிலையும், முடக்கமடைந்த நிலையும்தான் நீடிக்கிறது. திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

இது தொடர்பாக விருதுநகரை சேர்ந்த பாலகணபதி கூறியதாவது:- வணிக நகரான விருதுநகர் தொழில்மயமாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கடந்த பல வருடங்களாக மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு தொழில் திட்டங்களை அறிவித்த போதும் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது. படித்த இளைஞர்கள் பலர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ள நிலையில் இங்கு தொழில் தொடங்கினால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்பு ஏற்படும். மேலும், இதன் மூலம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோர் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்றார்.

விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர் வடிவேல்:- விருதுநகர் மாவட்டத்தை தொழில்மயமாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் மேலோங்கியுள்ளது. விருதுநகர்-சாத்தூர் இடையே தொடர்ந்து தொழில் தொடங்குவதற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை அதற்கான திட்ட பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

எனவே இனியாவது காலம் தாழ்த்தாமல் திட்ட பணிகளை தொடங்க வேண்டும். அதன் மூலமே இப்பகுதி தொழில்மயமாவதுடன் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள போதிலும் அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வந்தால்தான் மக்கள் பயனடைவார்கள் என்றார்.


Next Story