பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்:சாலையில் தோண்டப்படும் பள்ளங்கள் குறித்து எச்சரிக்கை பலகை- கலெக்டர் சங்கீதா அறிவுறுத்தல்
பயனற்ற ஆழ்துைள கிணறுகளை மூட வேண்டும். சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள் குறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று உள்ளாட்சிகளுக்கு கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பயனற்ற ஆழ்துைள கிணறுகளை மூட வேண்டும். சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள் குறித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று உள்ளாட்சிகளுக்கு கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு
மதுரை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிகுழிகள் போன்றவை மனிதர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதைத்தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. ஆழ்துளை கிணறு விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கடந்த 2010-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு வகுத்து தந்துள்ளது.
அதன்படி ஆழ்துளைகிணறு தோண்டுவதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். கிணறுகள் தோண்டும் போது சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். கிணற்றினை தோண்டும் நிறுவனத்தின் பெயர், நில உரிமையாளரின் பெயர், தோண்டும் கால அவகாசம் ஆகியவை குறித்த தகவல் பலகையை வைக்க வேண்டும். தோண்டிய கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனாலோ, தண்ணீர் வற்றி கைவிடப்பட்டாலோ உடனடியாக அதை மண் போட்டு மூடி சிமெண்டு மூலம் அடைக்க வேண்டும். கிணற்றினை மூடிவிட்ட தகவலை உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
சாலை பள்ளங்கள்
இது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அதன்படி கைவிடப்பட்ட கிணறுகள், குவாரிகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை முறையாக உள்ளாட்சி அமைப்புகள் கணக்கெடுக்க வேண்டும். கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் விபத்துகள் ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். ஆழ்துைள கிணறுகளை மூடிகள் கொண்டு அடைத்தும் வைக்க வேண்டும். கைவிடப்பட்ட குவாரிகளில் இளைஞர்களும், குழந்தைகளும் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனை குவாரி உரிமையாளர்கள் உடனடியாக வேலி அமைத்து தடுக்க வேண்டும்.
சாலையோரங்களில் கட்டுமான பணிகளில் தோண்டப்படும் பள்ளம் மற்றும் சாலையோரங்களில் உள்ள கால்வாய்களில் தோண்டப்படும் பள்ளங்கள் குறித்து ஓட்டுனர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இது வாகன விபத்தை தடுக்கும். இந்த எச்சரிக்கை பலகைகளை அமைப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் கவனமுடன் செயல்பட வேண்டும். கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்களில் கட்டுமான பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள், கால்வாய்கள், கைவிடப்பட்ட குவாரிகளில் ஆகியவற்றில் விபத்துகள் ஏற்படாத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.