அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து நகை பணம், கொள்ளை


தாழக்குடி அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் புகுந்து நகை- பணத்தை ெகாள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தாழக்குடி அருகே ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் புகுந்து நகை- பணத்தை ெகாள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொழிலாளி

தாழக்குடி அருகே உள்ள வீரநாராயணமங்கலம் தெற்குதெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், பிளம்பர். இவருடைய மனைவி சரண்யா. கோபாலகிருஷ்ணன் வீட்டின் அருகிலேயே அவரது பெற்றோரான பரமசிவனும், கோமதியும் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோபாலகிருஷ்ணன் வெளியூர் சென்றதால் வீட்டை பூட்டிவிட்டு சரண்யா அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்.

நகை-பணம் கொள்ளை

இந்தநிலையில் நேற்று காலையில் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள், பொட்கள் சிதறி கிடந்தன. மேலும், அதில் இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளி குத்து விளக்கு, வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகியவை மாயமாகி இருந்தனர்.

பின்னர், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையர்கள் வீட்டின் மாடி அறைக்கதவை உடைத்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகைகளை சேகரித்தனர்.

மேலும், 2 வீடுகளில்...

இதேபோல கண்டமேட்டு காலனி சி.எஸ்.ஐ. சர்ச் அருகே உள்ள வாத்து வளர்த்து வரும் உதயகுமார் (60) என்பவரின் வீட்டுக்குள்ளும் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்து 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அதே பகுதியில் உள்ள அருள்பாய் (65) என்பவரின் வீட்டில் இருந்து ½பவுன் தங்க மோதிரம் மற்றும் வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் நடந்த 3 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஒரே இரவில் அரங்கேற்றி உள்ளனர்.

துணை சூப்பிரண்டு விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் நவீன்குமார் நேரில் சென்று கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story