தஞ்சை மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவு
தடைகாலம் எதிரொலியாக தஞ்சை மீன்மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாக இருந்தது.
தடைகாலம் எதிரொலியாக தஞ்சை மீன்மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாக இருந்தது.
தடைகாலம்
கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிக அளவில் நடைபெறும். இந்த காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிபட்டு மீன் குஞ்சுகள் அழிந்து விடும்.
எனவே இந்த காலங்களில் கடலில் மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இந்த தடை உத்தரவு அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி வரை உள்ளது.
வரத்து குறைவு
இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த காலங்களில் விசைப்படகுகளை மராமத்து பணி, வர்ணம் பூசும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பைபர் படகுகளில் கடலுக்குள் சிறிது தூரம் சென்று மீன்வர்கள் மீன்களை பிடித்து வருகின்றனர்.
இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீன்மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தஞ்சை கொண்டிராஜபாளையம் ரவுண்டானா அருகே மீன்மார்க்கெட்டில் உள்ள சில்லறை மீன் விற்பனை கடைகளுக்கு நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, கடலூர், சென்னை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, அதிராம்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
விலை அதிகரிப்பு
தஞ்சை மாவட்டத்தில் பண்ணைக்குட்டைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களும் விற்பனைக்காக தஞ்சை மீன்மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.நேற்று குறைந்த அளவே கடல் மீன்கள் விற்பனைக்காக வந்திருந்ததால் விலை அதிகரித்திருந்தது. கிளங்கா ரூ.150-க்கும், இறால் ரூ.300-க்கும், கிளிகொடுவா ரூ.500-க்கும், மதனகொடுவா ரூ.300-க்கும், சங்கரா ரூ.300-க்கும், நண்டு ரூ.300-க்கும் விற்பனையானது.
இதேபோல் பப்புவவ்வா, பொடிப்பாறை, வஞ்சிரம், வாவல் மீன் உள்ளிட்ட மீன்களின் விலையும் அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் நாட்டு மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இருந்தும், தஞ்சை மாவட்டத்தில் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களும் விற்பனைக்காக அதிக அளவில் வந்திருந்தது. உயிர் கெண்டை மீன் கிலோ ரூ.200-க்கும், விரால் ரூ.500-க்கும், கானங்கெழுத்தி ரூ.130-க்கும் விற்பனையானது.