ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.85 லட்சம் கன அடியாக அதிகரிப்பு: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தர்மபுரி,
கர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
வெள்ளப்பெருக்கு
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளை வெள்ளம் மூழ்கடித்து செல்கின்றன. மேலும், நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேட்டூர் அணை
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு 2-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.