கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என வேலூர் தாசில்தார் கூறினார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் மழைநீரை அகற்ற வேண்டும்.
பொக்லைன் எந்திரம், மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
அதன்படி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'மாண்டஸ்' புயல் காரணமாக ஏற்படும் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் 0416-2220519 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அதனை வருவாய்துறை அலுவலர்கள் பதிவு செய்வார்கள். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும் என்று தாசில்தார் செந்தில் தெரிவித்தார்.