முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கேட்டு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், முறைசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் மனோகரன், ஜெயசீலன், தனசாமி, பிச்சைமுத்து மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது முறைசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதேபோல் தொழிலாளர்களுக்கு இயற்கை மரண நிதியாக ரூ.2 லட்சமும், திருமண உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
மாவட்ட கண்காணிப்புக்குழுவை அமைத்து மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். மேலும் கட்டுமானம், ஓட்டுனர் நலவாரியங்களின் நிதியை தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.