சென்னையில் மளிகைக் கடை - சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை என தகவல்
ஆவின் பார்லரில் வாங்கினால் 30 ரூபாய் கொடுக்க வேண்டும். மளிகை கடைகளில் 32 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்.
சென்னை,
சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாகிறது. காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும். சென்னையில் ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, பச்சை, புளூ என 3 வகை பாக்கெட்டுகளில் புழக்கத்தில் விற்பனையில் உள்ளது. இதில் ஆரஞ்சு பால் பாக்கெட் கார்டுதாரராக இருந்தால் ½ லிட்டர் 24 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஆவின் பார்லரில் வாங்கினால் 30 ரூபாய் கொடுக்க வேண்டும். மளிகை கடைகளில் 32 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும். கிரீன் பால் பாக்கெட் ½ லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.20-க்கு கிடைக்கும். பார்லரில் ரூ.22-க்கும் மளிகை கடைகளில் ரூ.24-க்கும் கிடைக்கிறது. புளூ பாக்கெட் பால் ½ லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.18.50-க்கு கிடைக்கிறது. ஆவின் பார்லரில் 20 ரூபாய்க்கும் மளிகை கடைகளில் ரூ.22-க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து மளிகைக் கடைக்காரர் கூறுகையில், பால் பாக்கெட்டுகளை எங்கள் கடைக்கு கொண்டு வருபவர் 50 பைசா லாபம் வைத்துதான் எங்களிடம் தருவார். எங்களுக்கு அடக்க விலையே 20 ரூபாய் 50 பைசா ஆகிவிடுகிறது. அதன் மீது நாங்கள் ரூ.1.50 வைத்து 22 ரூபாய்க்கு பால் பாக்கெட்டை விற்கிறோம். ஆனால் சூப்பர் மார்க்கெட்டை பொறுத்த வரை அவர்கள் பில்போடுவதால் எம்.ஆர்.பி. விலை ரூ.20-க்குதான் விற்க வேண்டும். அதைவிட கூடுதலாக இப்போது விற்பதாக தகவல் வருகிறது.
சென்னையில் ஆவின் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் இதற்கு முன்பு வந்து விடும். ஆனால் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது காலதாமதமாக கிடைக்கிறது. எனவே அரசாங்கம் பால் வினியோகத்தை கண்காணித்து அதிகாலையிலேயே பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.