ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது ஏன்?; முகநூலில் இளைய மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்


ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது ஏன்?; முகநூலில் இளைய மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
x

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது ஏன் என்பது குறித்து முகநூல் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

தேனி

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது ஏன் என்பது குறித்து முகநூல் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் மகன்

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருடைய நினைவிடத்தில், ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். இந்நிலையில் இந்த தர்மயுத்தம் ஏன் நடந்தது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் வி.ப.ஜெயபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த முகநூல் பதிவில் வி.ப.ஜெயபிரதீப் கூறியுள்ளதாவது:-

"சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்; தற்போது அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிறார்" என்று ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி ஒரு சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு உண்மை நிலையை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றார். அதற்குப் பிறகு ஒரு சில தலைமைக் கழக நிர்வாகிகளின் தூண்டுதலால் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக நீங்கள் வரவேண்டும் என்று சசிகலாவை மூளைச்சலவை செய்தார்கள்.

காலச்சூழல் சரியில்லை

அப்போது ஓ.பன்னீர்செல்வம், போயஸ் கார்டனில் நடந்த கலந்துரையாடலில் தன்னுடைய கருத்தான, "நான் முதல்-அமைச்சர் பதவியை தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு தற்போதைய காலச் சூழ்நிலைகள் சரியாக இல்லை என்று என் மனது சொல்கிறது. தற்போது கட்சியை வலுப்படுத்த வேண்டிய தருணமாக இருக்கிறது. தாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களை சந்தித்து அவர்களின் பேராதரவுடனும், தமிழக மக்களின் பேராதரவுடனும் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அதுதான் கட்சிக்கும் தமிழ்நாட்டிற்கும் நலனாக அமையும்" என்று தனது கருத்தை எடுத்துரைத்தார்.

ஆனால் அவருடைய கருத்தை அப்போது யாரும் ஏற்கவில்லை. ஒரு சில தலைமைக்கழக நிர்வாகிகளின் வற்புறுத்தலால் ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு, கட்சிக்கு மிகப்பெரிய சோதனை வரப்போகிறது என்று மன வருத்தத்துடன் ஜெயலலிதா நினைவிடத்தில் வணங்கிவிட்டு, கட்சியின் தொண்டர்களிடம் உண்மை நிலவரத்தை தெரிவிப்பதற்காக நினைவிடம் சென்றார்.

தர்மயுத்தம் ஏன்?

அவர் சுயநலத்தோடு பதவிக்காக அங்கு சென்றார் என்றால், ஒரு சட்டமன்ற உறுப்பினரையாவது அவருடன் அழைத்து சென்றிருக்கலாம். அல்லது தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு சென்று அமர்ந்து அரசியல் செய்திருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் அப்போது அவர் செய்யவில்லை.

தனி ஒருவராக அங்கு சென்று தன்னுடைய மனதில் தோன்றிய கருத்தை மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரிவிப்பதற்காக பேட்டியாக கொடுத்தார். அந்தப் பிரச்சினையை அப்போதே கலந்து பேசி, சரி செய்திருந்தால் பிரச்சினைகள் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.

ஆனால் அன்றிரவு சுமார் 1 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று அவரைக் கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளிவந்தது. அதற்குப் பிறகு தான், உண்மையாக இருந்த தன்னை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தோடு, நாம் அமைதியாக இருந்தால் கட்சிக்கு நல்லதில்லை என்று தர்மயுத்தத்தை தொடங்கினார்.

இறைவனின் நீதிப்படி குடும்பமாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி, ஒரு மக்கள் இயக்கமாக இருந்தாலும் சரி பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் வரத்தான் செய்யும். இது உலக நியதி. கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையுடன் கரம் கோர்த்து கட்சியை தர்மத்தின் வழியில் வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story