வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்


வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்
x

கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குவதை யொட்டி வெளிநாடுகளில் இருந்து புதிதாக வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை

கார்த்திகை தீபத் திருவிழா இன்று தொடங்குவதை யொட்டி வெளிநாடுகளில் இருந்து புதிதாக வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 6-ந்தேதி 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மகா தீபத்தை தரிசிக்க சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி மகா தீபம் நடைபெறுவதால் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பாதுகாப்பு பணிக்காக 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் திருவண்ணாமலை மாடவீதி, கிரிவலப் பாதை மற்றும் முக்கிய இடங்களில் வியாபார நிறுவனம் நடத்துபவர்கள் குறித்தும், வீடுகளில் வாடகைக்கு தங்கி இருப்பவர்கள் குறித்தும் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில்...

இதேபோல் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்தும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.இந்த நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட்டு பிரிவு அலுவலகத்தில் கூடுதல் துணை போலீல் சூப்பிரண்டு வெள்ளைத்துரை, துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து புதிதாக வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினர்.

அப்போது சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் புதிதாக யாராவது வெளிநாட்டினர் வருகை தந்தாலும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் தென்பட்டாலும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ், அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story