இயற்கை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்


இயற்கை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையையொட்டி, இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று முதல்நிலை மீட்பாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

வடகிழக்கு பருவமழையையொட்டி, இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று முதல்நிலை மீட்பாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

பேரிடர் மேலாண்மை பயிற்சி

ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மாவட்ட அளவிலான 3,500 முதல்நிலை மீட்பாளர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நீலகிரியில் 3,500 முதல்நிலை மீட்பாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளது. இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்நிலை மீட்பாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே கிராம அளவிலும், கோட்ட அளவிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.

இயற்கை சீற்றம்

இந்த பயிற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் இயற்கை சீற்றத்தினால் மரங்கள் சாலையில் விழுகின்றன. அதேபோல் சிறிய அளவில் மண்சரிவு ஏற்படுகிறது. இதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனடியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தங்கள் பகுதியில் அபாயகரமான மரங்கள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் தங்களது செல்போனில், ஏதேனும் இயற்கை சீற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளை பார்த்து தெரிந்துகொள்வ தோடு, தங்கள் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் தினேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story