பள்ளி வேன் மீது லாரி மோதி 8 மாணவர்கள் காயம்


பள்ளி வேன் மீது லாரி மோதி  8 மாணவர்கள் காயம்
x
தினத்தந்தி 19 Oct 2023 7:30 PM GMT (Updated: 19 Oct 2023 7:30 PM GMT)

ராயக்கோட்டை அருகே பள்ளி வேன் மீது லாரி மோதி 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். அப்போது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே பள்ளி வேன் மீது லாரி மோதி 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். அப்போது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி வேன்

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக ராயக்கோட்டைக்கு நேற்று சென்றது. அங்கு மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றி கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ராயக்கோட்டை அருகே காளன்கொட்டாய் பகுதியில் மாணவர்களை ஏற்றுவதற்காக வேன் சாலையில் நின்றது. ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு ஒரு டிப்பர் லாரி வேகமாக வந்தது. தாழ்வாக செல்லும் அந்த சாலையில் பள்ளி வேனின் பின்புறம் லாரி மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவிகள் ஹேமாவதி (16), முகேஷ் (11), மோனிஷா (8), சர்வன் (7), கோவிந்தராஜ் (8) உள்பட 8 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாலை மறியல்

இதற்கிடையே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நீண்ட நாளாக கோரிக்கை வைத்தும் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறி கிராம மக்கள் ராயக்கோட்டை- கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலால் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேகத்தடை அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த விபத்து தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய பாலக்கோடு வட்டம் நம்மாண்ட அள்ளி அருகே வேடம்பட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பார்தீபனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story