கைதிகள் சிகிச்சை பிரிவு
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் சிகிச்சை பிரிவு தனியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் சிகிச்சை பிரிவு தனியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாவட்ட ஆஸ்பத்திரியாக இருந்து வந்த நிலையில் மருத்துவக்கல்லூரி தொடங்கிய பின்பு இந்த ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் ரூ. 170 கோடி மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் அனைத்து வகை சிகிச்சை பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறை கைதிகளுக்கு என தனியாக சிகிச்சை பிரிவு அமைக்கப்படாமல் வழக்கமாக பொது சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சிறை கைதிகள்அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.
கொலை ெசய்ய முயற்சி
கடந்த மாதம் திண்டுக்கல்லை சேர்ந்த 2 கைதிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு கும்பல் ஆஸ்பத்திரி சிகிச்சை பிரிவில் 5-வது தளத்தில் அத்துமீறி நுழைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 2 கைதிகளை கொலை செய்ய முயற்சித்தது.
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் இந்த நிகழ்வு ஏற்பட்டது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இதர நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே சிறை கைதிகளுக்கு என தனியாக சிகிச்சைப்பிரிவு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வலியுறுத்தல்
இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டபோது இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே மாநில சுகாதாரத்துறை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் சிகிச்சை பிரிவு என தனியாக அமைத்து இதர நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.