வீட்டிற்கு மின் இணைப்பு கோரி இளம்பெண் நூதன போராட்டம்
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டிற்கு மின்சார இணைப்பு கோரி மனு கொடுக்க வந்த பெண் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
நூதன போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மனு அளிப்பதற்காக குளத்தூர் தாலுகா ஒடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் வந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மன்னர் சிலை அமைந்துள்ள ரவுண்டானா அருகே திடீரென முழங்கால் போட்டு கையில் மனுவை ஏந்தியபடி நூதன போராட் டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பதறிபோன போலீசார் விரைந்து வந்து அவரை அழைத்து சென்று விசாரித்தனர். இதில் ஒடுகம்பட்டியில் தனது அம்மா வசிக்கும் வீட்டிற்கு மின்சார இணைப்பு கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அதனால் வேறு வழியில்லாமல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மனுவை கலெக்டரிடம் அவர் கொடுத்த போது, அவரது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பா.ஜ.க.வினர் மனு
கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் வந்தனர். கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் தலைப்பு கருணாநிதியை சார்ந்ததாக வைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்தும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், தமிழ் வளர்த்த முன்னோடிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் பொதுவான பேச்சு போட்டியாக அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அவர்களது மனுவை அதிகாரிகள் பெறாததால் அதனை திரும்ப கொண்டு சென்றனர்.
279 மனுக்கள்
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 279 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.