என்.எல்.சி. மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தொடங்கி வைத்தார்
என்.எல்.சி. மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
நெய்வேலி,
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை அளித்து வருகிறது. பல்வேறு மருத்துவ வசதிகளை வழங்கி வரும் இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு வழங்கும் திட்டத்துக்கான தொடக்க விழா நடந்தது. விழாவில் என்.எல்.சி. நிறுவன தலைவர் மற்றும் மேலான இயக்குனர் ராக்கேஷ்குமார் கலந்து கொண்டு மனிதவள துறை செயல் இயக்குனர் சதீஷ்பாபு, மருத்துவமனை பொது கண்காணிப்பாளர் தாரிணி மவுலி ஆகியோர் முன்னிலையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கி, அதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் மூத்த டாக்டர்கள், நிர்வாக அதிகாரிகள், மனித வளத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். விழாவை தொடர்ந்து அந்தந்த வார்டுகளுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளுக்கு ஊழியர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது.