பெட்ரோல் பங்கிற்குள் பாறாங்கற்கள் ஏற்றிய டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து
குலசேகரன்பட்டினம் அருகே பெட்ரோல் பங்கிற்குள் பாறாங்கற்கள் ஏற்றிய டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குலசேகரன்பட்டினம்:
கூடங்குளத்திலிருந்து குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின்நிலையத்திற்கு நேற்று காலையில் ராட்சத பாறாங்கற்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்து (வயது 43) என்பவர் ஓட்டி சென்றார். அனல்மின் நிலையம் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அருகிலிருந்து பெட்ரோல் பங்க் உள்ளே புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியிலிருந்து பாறாங்கற்கள் சாலையில் சிதறியது. அப்போது பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர்கள் தப்பி ஓடினர். இந்த விபத்தில் டிரைவர் முத்து சிறிய காயத்துடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.