குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்திகாலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சிராமநத்தம் அருகே பரபரப்பு
ராமநத்தம் அருகே குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயன்றனா்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள லெக்கூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக அப்பகுதியில் கடந்த சில வாரங்களாக குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சரிவர தண்ணீர் ஏற்றப்படாததால் அதே பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளுக்கு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்ட பெண்கள், உடனே குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முற்றுகையிட முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், 2 நாட்களுக்குள் குழாய்கள் அமைக்கும் பணியை முடித்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்ற பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.