ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்


ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
x

தமிழகத்தில் ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

தமிழகத்தில் காவிரி, வைகை, குண்டாறு, வைப்பாறு இணைப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட மாநாடு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடந்தது.

மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். மாநாட்டை மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் புவிராஜ் மாநாட்டு திட்ட அறிக்கையை வாசித்தார். மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக ராகவன், மாவட்ட செயலாளராக பா.புவிராஜ், மாவட்ட பொருளாளராக நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர்களாக சீனிவாசன், கணபதி, பாலகிருஷ்ணன், நடராஜன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆறுகள் இணைப்பு திட்டம்

மாநாட்டில், மிளகாய், பாசி உள்ளிட்ட விடுபட்ட அனைத்து பயிர்களுக்கும் 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் காவேரி-வைகை-குண்டாறு-வைப்பாறு ஆறுகள் இணைப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். கொம்பாடி ஓடையின் குறுக்கே அணை கட்ட வேண்டும்.

விவசாயிகளின் நிலங்களுக்கு நிபந்தனை இல்லாமல் கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு உரம், விதை, பூச்சி மருந்து போன்ற இடுபொருட்களை தங்கு தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும். உரிய காலத்தில் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.


Next Story