கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட வலியுறுத்தல்


கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
x

கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

தூர்வார வேண்டும்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி தூத்தூர் தங்க தர்மராஜன் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ரூ.40 மற்றும் கிராமத்திற்கு ரூ.5 சேர்த்து கட்டாய வசூல் நடைபெறுகிறது. அதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசன பகுதியான சிலுப்பனூர், நானாங்கூர், ஆதனூர், ஓரியூர், கோமான் ஆகிய கிராமங்களை டெல்டா பாசன பகுதியில் சேர்க்க வேண்டும்.

அரியலூர் நகரை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அரியலூர் மார்க்கெட் கமிட்டியில் உள்ள இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார வேண்டும். தூத்தூர்-வாழ்க்கை கிராமத்திற்கு இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

சாலையை சரி செய்ய வேண்டும்

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் பேசுகையில், தா.பழூர் ஒன்றியத்தில் பருக்கல் முதல் அழிசுகுடி வரை சுமார் 150 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்கள். இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கும், விவசாய எந்திரங்கள் கொண்டு செல்வதற்குமான பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சாலையும் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே சாலையை சரி செய்ய வேண்டும். வெண்மான் கொண்டான் ஊராட்சியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீரில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே பொதுமக்கள் குடிக்க சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்தார்.

முருங்கைக்கு காப்பீடு

விவசாயி ராஜேந்திரன் பேசுவதில், முருங்கை மரமானது தற்போது காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பூ பூத்து காய் காய்க்கும் நேரத்தில் அதிக மழை பெய்து, காற்று வீசினால் முருங்கை விவசாயிகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு முருங்கை மரத்தையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் முருங்கைக்கும் விவசாய கடன் வழங்க வேண்டும். முருங்கை இலை, முருங்கைப்பூ, முருங்கைக்காய் என பல்வேறு பொருட்களை மதிப்பு கூட்டு உற்பத்தி செய்திட வழிவகுத்திட வேண்டும். தமிழக அரசே முருங்கைக்காயை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்திட வேண்டும், என்றார்.

கூட்டத்தில் இந்த ஆண்டு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறியதால், மதியம் ஒரு மணிக்கு பிறகே விவசாயிகள் தங்களது குறைகளை கூற அனுமதிக்கப்பட்டனர். இதனால் சில விவசாயிகளுக்கு மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கலவை சாதம்

முன்னதாக செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த கலவை சாதத்தினை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார். பொது வினியோகத் திட்டம் மூலம் அரியலூர் மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. இதில் சாதாரண அரிசியுடன் இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடையே காணப்படும் ரத்த சோகையை கட்டுப்படுத்த முடியும். இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலவை சாதம் வழங்கப்பட்டது.


Next Story