இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தல்


இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தல்
x

இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு பெரம்பலூாில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி கொடுத்ததற்கும், கோவில் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட, உட்கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கொத்து கூலியாக, தினக்கூலியாக பணியாற்றி வரும் தொழில்நுட்ப பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவித்து, அவர்களை காலமுறை ஊதியத்தில் தமிழக அரசு நியமித்திட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணியில் சாலை பணியாளர்கள் சங்கம் விடுமுறை நாளில் தீவிர தூய்மை பணியில் ஈடுபடுவோம். 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சம்பளத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் 2-வது நாள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.


Next Story