காவேரிப்பட்டணம் பேரூராட்சி பகுதியில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விரைந்து பணிகளை முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கவும் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, பேரூராட்சியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும், அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் விவரம் குறித்தும், தூய்மை பணிகளுக்கு பயன்படும் வாகனங்களின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
உரமாக்கும் கூடம்
மேலும் பேரூராட்சி மூலம் நடைபெற்று வரும் திட்ட பணிகளான கரகூர் வளமீட்பு பூங்காவில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கசடு சுத்திகரிப்பு மையத்தையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் ஈரக்கழிவுகளை உரமாக்கும் கூடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணியினை பார்வையிட்டார். தொடர்ந்து, பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் வளாகத்தில் இயங்கிவரும் தோட்டக்கலைத்துறை கல்லூரி செயல்பாடுகள் மற்றும் நெல், கேழ்வரகு, சாமை, முருங்கை, மா கன்று உற்பத்தி மற்றும் தோட்டக்கலை விதைகள் உற்பத்தி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், ஜீனூர் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் எம்.எஸ்.அனிஷாராணி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, இளநிலை பொறியாளர் பழனிச்சாமி, இளநிலை உதவியாளர் இளங்கோ மற்றும் அலுவலக பணியாளர்கள் கார்த்திகேயன், செந்தில், முகமது இத்ரிஸ், விக்னேஷ், ராஜேஸ்வரி, மற்றும் வருவாய் அலுவலர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.