முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணியை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு


முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணியை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
x

முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணியை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

மதுரை

முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணியை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

குடிநீர் திட்டம்

மதுரை மாநகரில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். தற்போது மதுரை மாநகருக்கு வைகை அணையில் இருந்து தினமும் 115 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது.

இது தவிர வைகை ஆற்றுப்படுகையில் இருந்து 47 எம்.எல்.டி., காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 30 எம்.எல்.டி. ஆக மொத்தம் 192 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டு 100 வார்டு பகுதிகளுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 100 லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப எதிர்காலத்தில் நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் வினியோகம் செய்ய மொத்தம் 317 எம்.எல்.டி. குடிநீர் தேவைப்படும். எனவே மதுரை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து மதுரை மாநகருக்கு கூடுதலாக 125 எம்.எல்.டி குடிநீர் கொண்டு வருவதற்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1685.76 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின் மூலம் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கப்பெறும்.

ஆய்வு

மதுரை மாநகருக்கு முல்லை பெரியாறு - லோயர் கேம்ப் பகுதியில் இருந்து அம்ரூட் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு வருவதற்காக முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப் பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதானக்குழாய் பதித்தல், பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. அளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியில் இருந்து மதுரை மாநகர் வரை 54 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல், 38 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல் மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்குதல் ஆகிய பணிகள் இந்த திட்டத்தில் அடங்கும்.

அதன்படி சிப்பம்-1-ல் லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை பணிகள், சிப்பம்-2-ல் பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும், சிப்பம்-3-ல் அணைப்பட்டி பகுதி மற்றும் சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் நடந்து வருகிறது.

அதனை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சி இயக்குனர், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மார்க்கெட்

இதனைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெறும் மார்க்கெட் சாலைப் பகுதியில் இருப்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மார்க்கெட்டை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து கீழ மாரட் வீதியில் செயல்படும் தயிர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் பொருட்டு ரூ.1.35 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு நிரந்தர மேற்கூரைகள், தடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் லட்சுமணன், செயற் பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, உதவி ஆணையாளர்கள் மனோகரன், சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story