தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குனர் திடீர் ஆய்வு


தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குனர் திடீர் ஆய்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று இயக்குனர் வளர்மதி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்

நாமக்கல்:

இயக்குனர் ஆய்வு

நாமக்கல் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று, விதை ஆய்வு, விதை பரிசோதனை நிலைய அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இயக்குனர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர், விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்குவதில் அனைத்து அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட்டு விதைகளின் தரத்தினை உறுதி செய்யவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அவர் நாமக்கல் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய முறையில் பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா? எனவும், இருப்புகள் சரியாக உள்ளதா? எனவும், பதிவுச்சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தார்.

அங்ககச்சான்று வயல்கள்

மேலும் விதைகள் விற்பனை செய்யும்போது விதையின் பெயர், குவியல் எண், காலாவதி தேதி மற்றும் விலை விவரம் அடங்கிய ரசீது வழங்கப்படுகிறதா? எனவும், ரசீதில் விவசாயியின் கையொப்பம் மற்றும் விற்பனையாளரின் கையொப்பம் இருக்கிறதா? எனவும் அவர் ஆய்வு செய்தார்.

விதைகளின் தரத்தினை உறுதி செய்து அவற்றை விற்பனை செய்யவேண்டும் என விதை விற்பனையாளர்களை கேட்டுகொண்டார். மேலும் வேட்டாம்பாடி கிராமத்தில் சோளம் கே-12 விதைப்பண்ணையையும், கெஜகோம்பையில் அமைந்துள்ள அங்ககச்சான்று வயல்களையும் இயக்குனர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் சண்முகம், வேளாண்மை துணை இயக்குனர் ராஜகோபால், விதைச்சான்று உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி, விதை ஆய்வாளர்கள் தேவிப்பிரியா, பாபு, விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, நாசர்அலி, வேளாண்மை அலுவலர் ஹரிதா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story