திருவாரூர் அலிவலம் சமத்துவபுரத்தில் ரூ.1¼ கோடியில் வீடுகள் கட்டும் பணி
திருவாரூர் அலிவலம் சமத்துவபுரத்தில் ரூ.1¼ கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.
திருவாரூர் அலிவலம் சமத்துவபுரத்தில் ரூ.1¼ கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.
வீடுகள் கட்டும் பணி
திருவாரூர் ஒன்றியம் அலிவலம் சமத்துவபுரத்தில் 25 வீடுகள் ரூ.1 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏதேனும் குறைகள் உள்ளதா? என பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் வீடு கட்டும் பணியினை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளத்தையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மன்னார்குடி ஒன்றியம் மூவாநல்லூர் கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் இயங்கிவரும் அரசு தோட்ட பண்ணையில் மரக்கன்றுகள் மற்றும் பழச்செடிகள் வளர்க்கப்பட்டு வருவதையும், மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட பரங்குசம் தேசிகர்குளம் தன்னார்வ அமைப்பு மூலம் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.
மன்னார்குடி
மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட கே.பி.எஸ். நகரில் பேவர் பிளாக் சாலை ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளதையும், மன்னார்குடி வட்டத்துக்கு உட்பட்ட சித்தேரி மரவாங்காடு ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் குடியிருப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்யப்பட்டு வருவதையும் கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் மகாதேவன், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சிவகுமார், பக்கிரிசாமி, மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.