கடத்தூர், பொ.மல்லாபுரம் பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு ஏரி கால்வாய்களை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு


கடத்தூர், பொ.மல்லாபுரம் பேரூராட்சிகளில்  வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு  ஏரி கால்வாய்களை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
x

கடத்தூர், பொ.மல்லாபுரம் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி, கால்வாய்களை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தர்மபுரி

கடத்தூர், பொ.மல்லாபுரம் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரி, கால்வாய்களை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கால்வாய் சீரமைப்பு

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகள் துறையின் சார்பில் கடத்தூர் மற்றும் பொ.மல்லாபுரம் ஆகிய பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல் கட்டமாக கடத்தூர் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் உள்ள கடத்தூர் ஏரியினை தூர்வாரி, கரைகளை செம்மைபடுத்துதல், ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 7.50 ஏக்கர் பரப்பளவில் உள்ள செஞ்சிரெட்டி ஏரியினை தூர்வாரி, கரைகளை செம்மைபடுத்துதல், ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புத்தர் நகரில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

சீமைக்ககருவேல மரங்கள்

அப்போது கலெக்டர் கூறுகையில், ஏரிகளில் கழிவுநீர் கலக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் வேருடன் அழித்து, மீண்டும் சீமைக்கருவேல செடிகள் வளராத வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி ஏரிக்கரைகளை செம்மைபடுத்த வேண்டும். மழைக்காலம் வருவதால் உடனடியாக நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, சுத்தம் செய்து ஏரிக்கு நீர்வரத்து தடையின்றி வருவதற்கு நீர்வரத்து கால்வாய்களை செம்மைபடுத்தி, பராமரிக்க வேண்டும்.

உத்தரவு

பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் எவ்வித காலதாமதமும் இன்றி தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென பேரூராட்சி துறை அலுவலர்களுக்கும், செயல் அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் துறை இளநிலை பொறியாளர் முருகன், கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், பொ.மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் உட்பட தொடர்புடையஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story