இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் விரைவில் ஆய்வு
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்க தயார் நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் விரைவில் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்க தயார் நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் விரைவில் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
அனுமதி
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ரூ.345 கோடியில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் முதல்கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுக்கான பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் 50 மாணவர்களுக்கும் இந்த கல்லூரியில் தனித்தளத்தில் அவர்களுக்கான பேராசிரியர்கள் மூலம் பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் முடிவடைய உள்ளன. இதனை தொடர்ந்து 2-ம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
ஆய்வு
இதன்படி அதற்கு முன்னதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்து 2-ம் ஆண்டு கல்வி தொடங்க தகுதியாக உள்ளதா என்று அறிக்கை அளிக்க வேண்டும். அதன்பின்னர்தான் வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதற்கு ஏற்ப கல்லூரியில் கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது நீட் தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி உள்ளதால் ராம நாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அடுத்ததாக முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும்.
தகவல்
தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி புதிய மருத்துவமனை கட்டும் பணிகள் 85 சதவீதம் அளவு முடிவடைந்து உள்ளது. ஓரிருவாரங்களில் மீதம் உள்ள பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் திடீரென்று வருவார்கள் என்று தகவல் வந்துள்ளது.
அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர்தான் 2-ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும். இதனிடையே குழுவினர் காணொளி காட்சி முறையில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ சாதனங்கள்
மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருவதால் அதற்கேற்ப மருத்துவ சாதனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் அனைத்து பிரிவு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2-ம் ஆண்டு கல்வி பாட வகுப்புகள் தொடங்கும்போது அதற்கு ஏற்ப கூடுதல் பேராசிரியர்கள் படிப்படியாக நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.