மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீபாவளி இனிப்பு தயாரிக்கும் கூடங்களில்-உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று(திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். இதனால் தமிழகம் முழுவதும் தீபாவளி இனிப்பு மற்றும் காரம் விற்பனை கடந்த 2 நாட்களாக சூடு பிடித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டல்கள், கடைகள், பேக்கரிகள் என மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து இன்றும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நேற்று பெரும்பாலான கடைகள் மற்றும் இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் பல்வேறு வகையான இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இனிப்பு கடைகளில் ஆய்வு
இந்தநிலையில் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் தீபாவளி இனிப்பு பலகாரங்கள் தரமாக தயாரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டதன் பேரில் நேற்று தர்மபுரி நகர பகுதியில் உள்ள இனிப்பு தயாரிப்பு நிலையங்கள், பேக்கரிகள், ஓட்டல்கள், இனிப்பு கடைகள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு துறை தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் தர்மபுரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வின் போது இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான எண்ணெயில் செய்யப்படுகிறதா?, வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவு பயன்படுத்தப்படுகிறதா? என சோதனைசெய்தனர்.
காலாவதி உணவு பொருட்கள்
மேலும் அந்த பகுதியில் உள்ள பேக்கரிகள் மற்றும் இனிப்பு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், உணவு தர பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின் படி உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களிடம் அறிவுறுத்தினர்.
இதேபோன்று கடத்தூர், மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி மற்றும் இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தீபாவளி இனிப்புகள் தரமானதாக தயாரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயன்படுத்தப்பட்ட எண்ணையை மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.