பாலக்கோடு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


பாலக்கோடு ஒன்றியத்தில்  வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

தர்மபுரி

பாலக்கோடு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இ-பட்டாக்கள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேஷன் கடைகளை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி அனுமந்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் ஆய்வு செய்த கலெக்டர் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவினியோக திட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து தண்டாரஅள்ளி மற்றும் நம்மாண்ட அள்ளி கிராமங்களில் ஆதிதிராவிடர் நத்தம் என வகைப்பாடு செய்யப்பட்ட இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு இ-பட்டாக்கள் வழங்குவதற்கான புலத்தணிக்கை மேற்கொண்டார். பின்னர் சாமானூர் ஊராட்சி தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தில் ரூ.44 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சமுதாய கூடம் மற்றும் ரூ.31 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள உணவு அருந்தும் கூடத்தினையும் கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அடிப்படை வசதிகள்

இந்த ஆய்வின் போது கலெக்டர் கூறுகையில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது காரிமங்கலம் தாசில்தார் சுகுமார், பாலக்கோடு தாசில்தார் ராஜசேகர் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூட்டுறவு துறை அலுவலர் மற்றும் பல தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story