பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் ஸ்டார்ச் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தனியார் ஸ்டார்ச் தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை கழிவுநீர் பீனியாற்றில் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அலுவலர்கள் தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர். அப்போது தொழிற்சாலையில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், அதில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்தநிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமையில், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் அலுவலர் சாமுவேல் ராஜ்குமார், மாவட்ட நீர் வளத்துறை செயற்பொறியாளர் குமார், அரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் உள்பட 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் நேற்று அந்த தொழிற்சாலையில் திடீரென ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு திரண்டனர். அதில் ஒரு தரப்பினர் தொழிற்சாலையை திறக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் இரு தரப்பு விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.