தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு


தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுவாமிநாதன், நிர்மல்குமார் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். மேலும் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

விரைவாக முடிக்க வேண்டும்

இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்க வேண்டிய வழக்குகள் தொடர்பாகவும், விசாரணையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி, போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வழக்குகள் தொடர்பான விவரங்களை தெரிவித்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்தும் அப்போது ஆய்வு நடத்தப்பட்டது.

வழக்குகள் தொடர்பான விசாரணையை காலதாமதம் இல்லாமல் விரைவாக முடிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வின்போது நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

மரக்கன்றுகள்

ஆய்வின்போது தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மகளிர் நீதிமன்ற நீதிபதி சையத்பர்கத்துல்லா, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கணேசன், மாவட்ட வனஅலுவலர் அப்பலநாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.


Next Story