தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு செய்தார்.
முதன்மை செயலாளர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் ரூ.52.14 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். எர்ரப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடம், தேங்காய்மரத்துபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர்களுக்கான கழிப்பறை கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
உறுதி செய்ய வேண்டும்
கோடியூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறங்களிலும் 800 மரங்கன்றுகள் நடும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதியமான்கோட்டையில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு சென்று சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்கள் தகுதி உடைய பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேர்வதை துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மரியம் ரெஜினா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.