பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் சாந்தி ஆய்வு


பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் சாந்தி ஆய்வு
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் ரூ.3 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

ரூ.3 கோடியில் திட்டப்பணிகள்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப்பணிகளை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொம்மிடி முதல்நிலை ஊராட்சியில் ரூ.61 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அந்த பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.42 லட்சத்தில் கதிர் அடிக்கும் களம் அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உறிஞ்சி குழிகள் அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆலோசனை

பையர்நத்தம், வெங்கடசமுத்திரம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனந்தராம விஜயரங்கன், அருள்மொழி தேவன், உதவி பொறியாளர்கள் கலீல், சுரேஷ்குமார், பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பேரூராட்சி தலைவர் மாரி, செயல் அலுவலர் குமுதா மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story