தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை-கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு


தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை-கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தொப்பூர் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இரும்பு தடுப்புகள்

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் 2-வது வளைவு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் விபத்துகளை தடுக்க தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

அந்த பகுதியில் சுமார் 40 மீட்டர் அளவில் கூடுதலாக இரும்பாலான தடுப்பு (மெட்டல் கிரஷ் பேரியர் கார்ட்) அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தொப்பூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் 2-வது வளைவு பகுதியில் விபத்துகளை தடுக்க 40 மீட்டர் அளவில் கூடுதலாக இரும்பு தடுப்புகளை பொருத்தினர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் கலெக்டர் சாந்தி தொப்பூர் மலைப்பாதையில் விபத்து தடுப்பு பணிகள் குறித்து நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை பார்வையிட்டார். விபத்துகளை தடுக்க அவை பயன்படும் முறை குறித்து அப்போது துறை அலுவலர்கள் விளக்கினார்கள்.

தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தொப்பூர் மலைப்பாதையில் நடந்த விபத்துகளில் 23 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 2022-ம் ஆண்டு 9 ஆக குறைந்துள்ளது.

தொடர் நடவடிக்கை

இதை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் விபத்து உயிரிழப்புகளை தடுக்க பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் என்று ஆய்வின்போது துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து தொப்பூர் சுங்கச்சாவடி அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story