விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு
கம்பம், சின்னமனூர் பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் அதிகாரி ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், தேவராம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதைச்சான்று துறை விதை ஆய்வு துணை இயக்குநர் சு.வாசுகி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாற்றுப்பண்ணைகளில் விதை கொள்முதல், நாற்று வினியோகம் ஆகியவற்றிற்கு தனியாக பதிவேடுகளை பராமரித்து வினியோகிக்க வேண்டும்.
விற்பனை பட்டியல் இல்லாமல் நாற்றுகள் வினியோகம் செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்புகள் முறையாக இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும். பிற இடுபொருட்களான ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இருப்பு வைக்கும்பட்சத்தில் விதையின் தரம் மற்றும் முளைப்புதிறன் பாதிக்க நேரிடும். எனவே முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பின்னர் அவர், விதை பரிசோதனை மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் மற்றும் தேனி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வாளர்கள் முத்துராணி (தேனி), அஜ்மல்கான் (உத்தமபாளையம்) மற்றும் விதை பரிசோதனை அலுவலர்கள் உடனிருந்தனர்.