தர்மபுரியில் காவல்துறை வாகனங்களை மாவட்ட சூப்பிரண்டு ஆய்வு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் காவல் துறையில் பயன்படுத்தி வரும் வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாரிடம் அவர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தன்மை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், இமயவர்மன், புகழேந்தி ராஜா, சிந்து, மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.