முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு


முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Feb 2023 11:00 PM IST (Updated: 1 Feb 2023 11:00 PM IST)
t-max-icont-min-icon

3 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி

3 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

துணை குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு அணையின் நிலவரம் குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 13-ந்தேதி துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, துணை கண்காணிப்பு குழு தலைவராக இருந்த, மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் மாற்றப்பட்டு, அந்த பதவிக்கு சதீஷ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து துணை கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்தனர்.

இதில், தமிழக பிரதிநிதிகளான முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

மதகுகள் சோதனை

இந்த ஆய்வின்போது, அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக இருந்தது. பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகு பகுதிகள் ஆகியவற்றை இந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் கசிவுநீர் அளவை கணக்கிட்டனர். அது அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப துல்லியமாக இருந்தது. அதன்மூலம் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர். மேலும் அணையில் உள்ள மதகுகளை துணை கண்காணிப்பு குழுவினர் இயக்கி சோதனை செய்தனர். அவை நல்ல நிலையில் இயங்கின. பின்னர் அணையில் செய்யப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணிகள் குறித்து விவாதித்தனர்.

அதன்பிறகு இந்த குழுவினர் அணையில் இருந்து புறப்பட்டு தேக்கடிக்கு வந்தனர். தொடர்ந்து குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள், வல்லக்கடவு பாதை சீரமைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதங்கள் குறித்த அறிக்கை கண்காணிப்பு குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story